அகில பாரத துறவிகள் சார்பில், பவானி கூடுதுறையில் காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கங்கையைப் போல் புனிதமானது...
கங்கை போல் காவிரி நதியும் புனிதமானது என்று உணர்த்தும் வகையில், அகில பாரத துறவிகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பூஜை கடந்த 18–ந் தேதி கர்நாடகா மாநிலம் குடகு மலையில் உள்ள தலைக்காவிரியில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, ஏராளமான துறவிகள் காவிரி அணையின் உற்சவ சிலையுடன் ஊர்வலமாக காவிரி பாயும் முக்கிய பகுதிகளுக்கு செல்கிறார்கள். அங்கு காவிரி ஆற்றை மாசுபடுத்தக்கூடாது என்று பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் விளக்கி படித்துறையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள்.
மாசுபடுத்தக்கூடாது
இந்தநிலையில் அகில பாரத துறவிகள் சங்கத்தினர் ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறைக்கு வந்தனர். முன்னதாக சங்கமேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன்பின்னர் அகில பாரத துறவிகள், கொங்கு மண்டல துறவிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில், “காவிரி நதி கங்கையை போல் புனிதமானது. அதனால் ஆற்று தண்ணீரில் பிளாஸ்டிக் குப்பைகள், ஆலை கழிவுநீர் ஆகியவற்றை கலந்து மாசுபடுத்துவதை தடுக்கவேண்டும்“ என்று விளக்கப்பட்டது.
விளக்கு ஏற்றி வழிபாடு
அதைத்தொடர்ந்து இரவு 8 மணி அளவில் பவானி கூடுதுறையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவிரித்தாய் உற்சவ சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. பின்னர் கோவை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகள் தலைமையில் அகில பாரத துறவிகள் மற்றும் கொங்கு மண்டல துறவிகள் காவிரி தாய்க்கு தீபாராதனை காட்டினார்கள். தொடர்ந்து ஆற்றில் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் குமரகுருபர அடிகளார், ராமானந்தா, ரத்தினசைதன்யா மற்றும் 100–க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
தினத்தந்தி - 30 - 10 - 2013
0 comments:
Post a Comment