Home » » இலங்கை: :காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்

இலங்கை: :காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்

http://news.lankasri.com/show-RUmrzARaMYgv3.html

[ சனிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2013, 11:28.57 AM GMT ] [ வீரகேசரி ]



எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை - இது களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பகுதியில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.

ஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள் வாழ்வதாகவும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பெரும்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தமிழ் நாளிதம் ஒன்றுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.

ஆம்! புளத்சிங்ஹல நகரிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் கரடுமுரடான பாதையில் அரம்பஹேனவுக்கு பயணித்தோம். சுமார் 10 கிலோமீற்றர் பயணத்தின் பின்னர் இருபுறமும் அடர்ந்த காடுகள் நிறைந்திருக்க வேறெங்கோ தேசத்துக்கு வந்துவிட்டது போன்ற உணர்வு.

ஆங்காங்கே காணப்படும் இறப்பர் மரங்களுக்கு நடுவே மனிதர்கள் உள்ளே போக முடியாதளவுக்கு உயர்வான காட்டு மரங்களும், செடிகொடிகளும் நிறைந்திருக்கின்றன.

அடர்ந்த காடுகளுடன் கூடிய சிறு மலைக்குன்றுகளுக்கிடையே அமைந்திருக்கிறது லயன் குடியிருப்பு. அங்கு 14 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வருகிறார்கள்.

இந்தத் தோட்டம் மூடப்பட்டு 8 வருடங்கள் ஆகின்றன. அன்று முதல் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தரப்படவில்லை. மேலும் இதர வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கூலித் தொழில் செய்து வருகின்றனர்.

வளமான தோட்டமாக இருந்த அரம்பஹேன, நிர்வாகத்தின் கவனயீனம் காரணமாக காடாகிப் போனது. அந்தத் தோட்டம் 165 ஹெக்ரெயர் நிலப்பரப்பை கொண்டதாகவும் இறப்பர் மரங்கள் மீள்நடுகை செய்யப்படாத காரணத்தினால் தோட்டம் முழுவதும் காடாகிப் போனதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

அரம்பஹேனவில் தனித்து விடப்பட்டுள்ள இந்த மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை, வைத்தியசாலை இல்லை, மலசலகூடங்கள் இல்லை, தண்ணீரைக் கூட காத தூரத்தில் உள்ள கிணற்றிலிருந்துதான் பெற்றுக்கொள்கிறார்கள்.

யாருக்காவது சுகயீனம் என்றால்கூட நோயாளியை காட்டுவழியே தூக்கிக் கொண்டுதான் போக வேண்டும். மலைப்பாம்புகள் அதிகமாக நடமாடும் இந்தக் காட்டுப்பகுதியில் எங்கே கால் வைப்பது என்ற அச்சமே மரணத்தின் விளிம்புவரை எம்மைக் கொண்டு சென்றுவிடும்  என்கிறார் சங்கர் என்ற குடும்பஸ்தர்.

பி.பால்ராஜ் (53)  என்ற குடும்பஸ்தர் தமது பிரச்சினைகளை இவ்வாறு விபரிக்கிறார்.

நாம் பரம்பரை பரம்பரையாக இங்கே வசிக்கிறோம். 1924ம் ஆண்டு இந்த தோட்டத்துக்கு எங்களுடைய குடும்பத்தார் வந்திருக்கிறார்கள். நல்ல இலாபத்துடன் தோட்டம் இயங்கி வந்தது.

2005 ம் ஆண்டிலிருந்துதான் இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இறப்பர் மரங்களை பிடுங்கிவிட்டார்கள். கிட்டத்தட்ட 1600 மரங்கள் இருந்தன. இப்போது 500 மரங்கள் கூட இல்லை. மற்றைய இடங்களெல்லாம் காடாகிவிட்டது.

தோட்ட முகாமையாளரிடம் பல தடவைகள் முறையிட்டோம். ஆனால் எமது அழுகுரலுக்கு யாருமே செவிசாய்க்கவில்லை. திடீரென வேலை நிறுத்திவிட்டார்கள். சம்பளம் தராததால் வருமானத்துக்கு வழியும் இல்லாமல் திண்டாடினோம். இறப்பர் மரத்தின் உச்சிவரை பால் வெட்டி தோட்டத்துக்குக் கொடுத்தோம். ஆனால் எந்தப் பிரதிபலனும் கிடைக்கவில்லை.

நாம் தமிழர்கள் என்பதால்தான் ஒடுக்கப்படுகிறோம். இங்குள்ள சிங்கள அரசியல்வாதிகளிடம் போனால், நீங்கள் தமிழர்களுக்குத்தானே வாக்களித்தீர்கள், அவர்களிடமே போய் கேளுங்கள் என்கிறார்கள்.
நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். கடவுளும் எம்மை கைவிட்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது என்றார்.

எஸ்.சரோஜினி (66) என்பவர் கூறுகையில்,

நாங்கள் இந்தத் தோட்டத்துக்கு சேவையாற்றியிருக்கிறோம். வியர்வை சிந்தி உழைத்த இடமெல்லாம் இப்போது காடாகிப்போய்விட்டது. காட்டு வழியாகத்தான் எங்களுடைய லயனுக்கு வரவேண்டும் என்பதால் யாரும் இங்கே வரமாட்டார்கள்.

வேலை இல்லாததால் கால்வயிறு, அரைவயிறு என்றுதான் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் நித்திரையின்றித் தவிக்கிறோம் என்றார்.

அரம்பஹேனயிலுள்ள சிறுவர்கள் அருகிலுள்ள குடகங்கை என்ற தோட்டத்திலுள்ள பாடசாலைக்குச் செல்கிறார்கள். அந்தப் பாடசாலை தரம் 9 வரை மாத்திமே கொண்டு இயங்குகிறது.

அதற்கு மேல் கல்வி கற்பதற்கு மத்துகமை நகருக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். அவ்வாறெனின் பல கிலோமீற்றர் தூரம் காட்டுவழியே நடந்து சென்றுதான் பஸ்ஸில் பயணிக்க வேண்டும்.

அவ்வாறு பாடசாலைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்மதியின்றிக் காத்திருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். நீண்டதூரம் நடக்க வேண்டியதால் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியோரும் உள்ளனர்.

தோட்ட மக்கள் பகலில் நடமாடுவதற்கும் அச்சம் கொண்டிருக்கிறார்கள். குடியிருப்பைச் சூழ சிறுகுன்றுகளில் காட்டுப் பன்றிகளும் மலைப்பாம்புகளும் விஷப்பூச்சிகளும் இருப்பதாகவும் இரவில் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

தோட்டத்தில் உள்ளவர்களுக்கு யாராவது கடிதம் அனுப்பினால் கூட அது உரியவர்களை சென்றடைவதில்லை. தபால்காரரே இல்லாத தோட்டத்தில் எப்படி கடிதம் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அரம்பஹேன தோட்டம் மூடப்படுவதற்கு முன்னர் இறப்பர் மரங்கள் குத்தகை அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. எனினும் தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவருக்கே வழங்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தோட்டக் குடியிருப்பிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் பால் சேகரிக்கும் நிலையம் இருக்கிறது. உள்ளே போகமுடியாத அளவுக்கு காடுகள் வளர்ந்து உடைந்து சேதமடைந்து பாழடைந்திருக்கிருக்கிறது அந்த நிலையம்.

அரம்பஹேன தோட்ட மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அபாயம் மற்றும் சிரமங்கள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் பலரிடமும் முறையிட்டிருக்கிறார்கள். இதுவரை விமோசனம் கிடைக்கவில்லை.

அரம்பஹேன தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் எதனையும் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள்.

தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் முழுத் தொழிலாளர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரல் வெளியுலகுக்கு கேட்காவண்ணம் திட்டமிட்ட வகையில் இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஏனென்றால் தோட்டத்தில் தொழில் வழங்கப்படாத தருணத்தில் நிர்வாகம், வேறு தோட்டங்களில் இவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். அல்லது ஏதாவது மாற்றீடான திட்டங்களை அமுல்படுத்தியிருக்கலாம். ஆனபோதும் தொழிலாளர்கள் குறித்த எந்த அக்கறையும் இங்கு வெளிக்காட்டப்படாமை கவலையளிக்கிறது.

பெரும்பான்மையினத்தோர் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு மத்தியில் இத்தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தோட்டத்தையும் பெரும்பான்மையினருக்கு விற்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் ஒருபுறம் குற்றம் சுமத்தப்படுகிறது.

தாங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய கலை,கலாசார,விழுமியங்களையும் பாதுகாக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

தோட்டம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொழில் வழங்கப்பட வேண்டும் அல்லது வேறு இடத்தில் தமக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அரசியல்வாதிகள் பலர் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து போயிருக்கிறார்கள். இந்த மக்களின் குறைகளை தீர்ப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆக,தோட்டம் முழுவதும் காடாக மாறியமைக்கு யார் பொறுப்பு? ஒவ்வொரு நிமிடத்தையும் அச்சத்துடன் கழித்துக்கொண்டிருக்கும் மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார்? பெரும்பான்மை இனத்தோர் வாழ்கின்ற தோட்டங்கள் சரியாக நிர்வகிக்கப்படுகின்ற போது, இந்தத் தோட்டம் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நோக்கப்பட்டது ஏன்? போன்ற கேள்விகள் இயல்பாய் எழுகின்றன.

உண்மையில் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் காட்டுக்கு நடுவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்களுக்கு தோட்ட நிர்வாகம் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று பருவத்தில் பூக்கும் காளான்கள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் சென்று வாக்கு கேட்டுக் கெஞ்சும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இனிமேலும் மௌனம் சாதிக்கக் கூடாது.

ஒரு சமூகம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டுகொண்டிருக்க இங்கே ஒரு சமூகம் அடுத்த நிமிடத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் உரிய தரப்பினர் இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger