Home » » மனிதநேயத்தின் மறு உருவமாகத் திகழும் மதுரா டிராவல்ஸ் நிறுவனர் வீ.கே.டி.பாலன் !.

மனிதநேயத்தின் மறு உருவமாகத் திகழும் மதுரா டிராவல்ஸ் நிறுவனர் வீ.கே.டி.பாலன் !.


 

தினமலர் இணையதளத்தில் சாதனை புரிய துடிக்கும் மாற்றுத் திறனாளிகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகி வருகிறது. இந்த கட்டுரைகள் வெளியான சில தினங்களில் சம்பந்தபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து நமக்கு ஒரு தகவல் வரும்.

சார், சென்னையில் இருந்து மதுரா டிராவல் சர்வீஸ் தலைவர் வீ.கே.டி.பாலன் என்பவர் பேசினார், எல்லோரையும் போல பாராட்டுவதோடு நின்றுவிடாமல் என் தகுதிக்கேற்ற வேலையும் கொடுத்துள்ளார் என்று சொல்வார்கள்.
பசித்தவனுக்கு மீன் கொடுத்தால் அப்போதைக்கு அவனது ஒரு வேளை பசி மட்டுமே தீரும் ஆனால் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் ஆயுளுக்கும் அவனது பசி தீரும்.

இப்படி ஒருவனது ஆயுட்காலத்திற்குமான பசியை போக்கும் விதத்தில் செயல்படும் பாலன் என்பவரை பார்த்து ஒரு நன்றி சொல்வதற்காக நேரம் ஒதுக்க கேட்டிருந்தேன்.

நான் சாதாரணமான ஆள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் இப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் உடனே வாங்க என்றார்.

நான் போய் பார்த்த போதுதான் தெரிந்தது அவர் அவ்வளவு சாதாரணமான ஆள் இல்லை என்று. இரண்டு ரூபாய் சம்பாதிப்பதற்காக அமெரிக்க தூதரக வாசலில் விடிய, விடிய கொட்டும் பணியில் கிடந்து தனது உழைப்பை ஆரம்பித்தவர் இன்று 20 கோடி ரூபாய்க்கும் மேலான வர்த்தகம் நடக்கும் மதுரை டிராவல் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


வருடத்தில் 365 நாளும் 24 மணி நேரமும் இயங்கும் இவரது நிறுவனம் சுற்றுலா தொடர்பான பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. ஒரு போன் செய்தால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விமான டிக்கெட் தேடிவரக்கூடிய அளவிற்கு நிறுவனத்தை கணினிமயமாக்கியுள்ளார்.
கலைமாமணி விருது பெற்றுள்ளார்,

 தமிழ் திரை இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து இவர் நிகழ்த்திய சாதனை இசைக் கச்சேரியை முறியடிக்க இன்னும் யாராலும்ம் முடியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை சாதனை படைப்பவர்களை தேடிப் பிடித்துப் பாராட்டு விழா நடத்தி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கவுரவித்து வருகிறார்.

வர்த்தகத்தை தாண்டி இவரிடம் மண்டிக் கிடக்கும் மனிதநேயம்தான் இவரைப்பற்றி பலரையும் பேச வைத்திருக்கிறது.


கதர் வேட்டி, சட்டை, ரப்பர் செருப்புடன் சிரித்த முகத்துடன் வரவேற்ற அவரது டேபிளில் இருந்த ஐபேட் சாதனத்தில் தினமலர் இணையதளச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார்.


நான் "டி.வி.,' சினிமா பார்ப்பது கிடையாது பார்ப்பது எல்லாம் ஐபேடில் தினமலர் மட்டுமே அவ்வப்போது பார்த்து நான் என்னை எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறேன் என்றார்.


அப்படி அதில் படித்தபோதுதான் கம்ப்யூட்டரில் தேர்ச்சிபெற்ற கோவையில் உள்ள ஜெகதீஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞனை பற்றி படித்தேன், பேசினேன் இப்போது எங்கள் நிறுவனத்தின் வெப் சைட் டிசைனர் மற்றும் சூப்பர்வைசர் எல்லாம் அவர்தான் ஆன் லைனில் வேலை பார்க்கிறார். என் எதிர்பார்ப்பைவிட நன்றாக வேலை செய்கிறார்.


அது மட்டுமல்ல என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பலரும் மாற்றுத் திறனாளிகள்தான், அவர்களுக்கு தேவை எல்லாம் அனுதாபம் அல்ல ஒரு வாய்ப்புதான் அதை உணர்ந்து நான் வாய்ப்பு தருகிறேன் இப்போது நார்மலாக உள்ளவர்களை விட பிரமாதமாக வேலை செய்கிறார்கள்.


எல்லா இடங்களிலும் அரவாணிகள் நடந்து கொள்ளும் விதம் ஒருமாதிரியாக இருந்தால் பாலன் நிறுவனம் அமைந்துள்ள தெருவிற்குள் நுழையும் போதே அவர்களது அணுகுமுறை வேறாக இருக்கிறது. காரணம் அனைவரையும் ஒரு முறை அழைத்து பிரியாணி வாங்கிக் கொடுத்து தலைக்கு இருநூறு ரூபாய் கொடுத்ததுடன் உங்களுக்கு எல்லாம் இனிமே நான்தான் அப்பா, ஆகவே எங்கப்பாவா பார்க்க வந்திருக்கேன் என்று சொல்லி விட்டு வாருங்கள் வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார், சொல்லியபடியே செய்தும் வருகிறார், ஆகவே அரவாணிகளுக்கான அப்பாவாக இங்கே பாலன் இருக்கிறார்.


கையில், கழுத்தில், விரல்களில் எல்லாம் கிராம் கணக்கில் அல்ல கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தவர் அன்னை தெரசாவை தரிசித்து திரும்பிய பிறகு அனைத்தையும் கழட்டிவிட்டு அன்றைய தினம் பூண்ட எளிமைக் கோலம்தான் இன்றைக்கும் தொடர்கிறது.


சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு சுற்றுலா, மனிதம் என்ற இரண்டிற்கு மட்டுமே முன்னுரிமை தரும் இவரின் வணக்கத்திர்க்குரியவர் தென்காசி அமர் சேவா நிறுவனர் ராமகிருஷ்ணன் மட்டுமே.


பள்ளி படிப்பை முடிக்காத இவரை இன்றைய தினம் கல்லூரிகள் போட்டி போட்டுக் கொண்டு பேச அழைக்கின்றன அந்த அளவு பேச்சாற்றல் மிக்கவர், அதே போல மனித நேய எழுத்தாளரும் கூட. இவர் தொகுத்து எழுதிய சொல்ல துடிக்குது மனசு எழுத்தாளர்களாலயே பெரிதும் வரவேற்று வாசிக்கப்பட்ட நூலாகும்.


பல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கையில் தவழும் காமராஜர் பற்றிய புத்தகம் இவரது முயற்சியில் வெளிவந்ததாகும்.,அடுத்ததாக செவி வழியாகவே பேசப்பட்டுவரும் நேர்மையின் சின்னமாய் வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பற்றிய ஒரு அற்புத பதிவை வெளிக் கொணரும் முயற்சியில் இருக்கிறார்.


நிறைவாக ஒன்று சொல்கிறேன் இந்த உலகில் யாரும், யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல அதிலும் ஊனமுற்றவர்கள் ஒரு போதும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல அதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன் அவர்களுக்குத் தேவை எல்லாம் ஒரு வாய்ப்பே.அந்த வாய்ப்பை தர நான் தயராக இருக்கிறேன் அதைப்பெற மாற்றுத் திறனாளிகள் தயராக இருக்கவேண்டும் அவ்வளவுதான்.


மனிதநேயத்தின் மறு உருவமாக தெரிந்த மதுரா டிராவல்ஸ் 

வீ.கே.டி.பாலனுடன் தொடர்பு கொண்டு பேச: 9841078674.

- எல்.முருகராஜ்

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger