தேசத் தந்தை மகாத்மா காந்தி உபயோகித்த சர்க்காவும், அவர் எழுதிய கடைசி உயிலும், லண்டனில் ஏலத்தில் விற்கப்பட்டது என்ற செய்தி உலகெங்கிலும் உள்ள காந்திய சித்தாந்தங்களில் நாட்டம் கொண்டவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி உபயோகித்த சர்க்கா 1,10,000 பவுண்டிற்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி). அவரது கடைசி உயில் 20,000 பவுண்டிற்கும் (சுமார் ரூபாய் 18 லட்சம்) விலை போயிற்று என்ற செய்தியை இந்தியாவில் வெளியாகும் எல்லா செய்தித்தாள்களும், ஊடகங்களும் பிரசுரித்துள்ளன. அவற்றில், சில செய்தித்தாள்களும், ஊடகங்களும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டதை குறித்து பெருமையாகவும், மகாத்மா காந்தியின் புகழுக்குக் கிடைத்த அங்கீகாரம் போலவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் பொருள்கள் ஏலம் விடுவதைப் பற்றி முன்பே அறிந்திருந்தும், இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பது புரியவில்லை. அப்படி தடுக்க முடியாவிட்டால், அந்த விலை மதிப்பில்லாத பொருள்களை ஏலத்தில் பெற்று, இந்தியாவிற்கு கொண்டு வந்து குஜராத்திலுள்ள மகாத்மா காந்தி வாழ்ந்து வந்த சபர்மதி ஆசிரமத்தில் பார்வையாளர்கள் கண்டு தரிசிக்க வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த விதத்தில் மகாத்மா காந்தி உபயோகித்த பொருள்கள் ஏலத்தில் விடக்கூடிய கேலிக்கூத்தை இனிமேலாவது நடக்காமல் தவிர்க்கலாம். மத்திய அரசு தனது கடமையிலிருந்து தவறியது என்பதில் சந்தேகமில்லை. தற்போது மகாத்மாவின் சர்க்காவையும், கடைசி உயிலையும் ஏலத்தில் எடுத்த நபரோ, அவரது சந்ததியினரோ அதிக லாபம் பெற சில ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் அதனை ஏலத்தில் விற்பனை செய்ய முயற்சிக்கலாம். மிகுந்த மரியாதையுடன் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய மகாத்மா காந்தி உபயோகித்த பொருள்கள் மேலும் வியாபாரப் பொருள்களாக மாறிவிடும்.
மகாத்மா காந்தி உபயோகித்த பொருள் மரத்தால் செய்த பொருள் அல்லது காகிதம் என்றோ கருதுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். தன்மானமும், நாட்டின் பெருமையில் அக்கறையுள்ள எவரும் இப்படி நினைக்கக்கூடாது. பெருமையுடன் வாழ்ந்து நாட்டின் நலனுக்கு பாடுபட்ட தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் சிலை அமைப்பது, நினைவுக் கூடங்களை ஏற்படுத்துவது, அவர்களது சமாதியை பேணி பாதுகாப்பது போன்ற செயல்களெல்லாம் இளைய சமுதாயத்தினரும், எதிர்கால சந்ததியரும் நாட்டின் தலைவர்களைப் பற்றியும், பாரம்பரிய பெருமைகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். பெருமை கொள்ள வேண்டும் என்பதற்காகவே, சிலைகளுக்கும், நினைவுக் கூடங்களுக்கும் நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது, மகாத்மா காந்தியால் உபயோகப்படுத்தப்படட சர்க்காவிற்கும், அவரால் எழுதப்பட்ட உயிலுக்கும் பன்மடங்கு முக்கியத்துவமும், மரியாதையும் செலுத்த வேண்டாமா?
தேசத் தந்தையாக நாம் போற்றி வரும் மகாத்மா காந்தியின் கொள்கைகளும், சித்தாந்தங்களும் இந்தியாவிற்கு இன்றும் என்றும் மிகவும் அவசியம். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் போன்ற பலரைப் பற்றி, பரவலாக ஊழல், நேர்மையின்மை என பல குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில், மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களும், அவரது வாழ்க்கையின் நெறிமுறைகளும்தான் எதிர்காலத்தில் நல்ல முறையில் இந்தியாவை நடத்தி செல்ல வழிவகுக்கும். மகாத்மா காந்தி உபயோகித்த சர்க்கா அவரது நேர்மைக்கும், எளியவர்களிடம் அவர் கொண்டிருந்த பாசத்திற்கும், அக்கறைக்கும் ஓர் எடுத்துக்காட்டு. கிறிஸ்துவ மதத்தில் சிலுவை எப்படி ஏசுநாதரின் மீது பக்தி செலுத்த ஒரு மரியாதைக்குரிய சின்னமோ, அதேபோல் மகாத்மா காந்தியின் சர்க்கா உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கும், காந்தியவாதிகளுக்கும் ஒரு மரியாதைக்குரிய சின்னம். லண்டனில் ஏலத்திற்கு வியாபாரப் பொருளாகப் போன மகாத்மா காந்தியின் பொருள்கள் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.
தினமணி -02-12-2013
0 comments:
Post a Comment