தேன்கூட்டுக்குள் அந்நியக் கூட்டைச் சேர்ந்த ஒரு தேனீயைப் பிடித்துப் போட்டால், அந்தத் தேன்கூட்டுக்குள் இருக்கும் மொத்தத் தேனீக்களும் கலைவதைக் காணலாம். சற்று நேரத்தில் அந்த அந்நியத் தேனீ கொல்லப்பட்டு வெளியே வீசப்படும். தேக்கமுற்ற மூளைகளும் இப்படித்தான் புதிய கருத்தை எதிர்கொள்கின்றன.
சிந்தனை முடக்கம்
நம் குழந்தைப் பருவத்தில் குடும்பச் சூழல், வெளிச் சமூகச் சூழலிலிருந்து இயல்பாகவே கொஞ்சம் கல்வி கிடைக்கிறது. அதன் பின்னர், கல்விக்கூடம் அளிக்கும் சிறிதளவு கல்வி. வாழ்க்கையில் எங்காவது ஓரிடத்தில் பதிந்து மேற்கொண்டு வாழப் பழகிவிட்டால், சிந்திப்பதை முற்றாகவே நிறுத்திவிடுகிறோம்.
நாம் ஏற்கெனவே அறிந்தவற்றைச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே நாம் விரும்பிப் பார்க்கிறோம். நாம் ஏற்றுக்கொண்ட கருத்தைச் சொல்லும் உரைகளை விரும்பிக் கேட்கிறோம். அவற்றையே பிறரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அவைதாம் நமக்குப் புரின்றன, நம்மை மகிழ்விக்கின்றன.
நாம் அறிந்திராத ஒரு புதிய கருத்து நம்முடைய அகத்தை நிலைகுலையச் செய்கிறது. நாம் அதுவரை உருவாக்கி வைத்திருந்த சிந்தனைகள் சரிகின்றன. ஆகவே, அது நமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கும். கோபம் கொள்ளச் செய்யும். நாம் நம்பிக்கொண்டிருப்பதில் ஆழமான உறுதி நமக்கிருக்கும் என்றால், புதிய சிந்தனை நமக்குக் கேலிக்குரியதாகவும் தோன்றும்.
மூன்று நிலைகள்
நம்முடைய அறிதலின் மூன்று படிநிலைகளை பௌத்த ஞானமரபு அடையாளப்படுத்துகிறது. ஒரு புதிய விஷயத்தை மனம் எதிர்கொள்ளும்போது நம் அகக் கட்டுமானமே அதிர்ச்சி அடைகிறது. அதை ‘அந்தக்கரண விருத்தி’ என்கிறது பௌத்தம். முதன்முதலில் கடலைப் பார்க்கும் குழந்தை திகைத்துச் சொல்லிழந்து அப்படியே விழித்துப் பார்த்து அமர்ந்திருப்பது அந்தக்கரண விருத்தி நிகழ்வதால்தான்.
அதன்பின் நாம் அந்தப் புதிய அனுபவத்தை நாம் ஏற்கெனவே அறிந்துவைத்திருக்கும் அறிவின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள முயல்கிறோம். ஏற்கெனவே நாம் அறிந்திருக்கும் அறிவெல்லாம் மொழியில் இருப்பதால் அந்தப் புதிய அனுபவத்தையும் மொழிக்குள் கொண்டுவருகிறோம். அந்தப் புதிய அறிதலுக்கு ஒரு பெயரிடுகிறோம். குழந்தை ‘பெரீய தண்ணி’ என்று சட்டெனக் கைநீட்டிக் கூவுகிறது. இதை ‘சப்தாகரண விருத்தி’ என்கிறது பௌத்தம்.
அந்தப் பெயர் வழியாக அந்தப் புதிய அறிதல் நாம் அறிந்த ஒன்றாக மாறிவிடுகிறது. அதன் பிறகு, அந்தப் பெயருடன் நாம் அறிந்த அனைத்தையும் இணைக்க ஆரம்பித்துவிடுகிறோம். ‘இதுதான் அது’ என அடையாளப்படுத்துகிறோம். இதை பௌத்தம் ‘ததாகரண விருத்தி’ என்கிறது.
இந்த மூன்று படிநிலைகளாக நிகழும் அறிதல் என்பதுதான் மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள பேரின்பம். பௌத்த சிந்தனையும் சரி, வேதாந்தமும் சரி மனிதன் உடல்கொண்டு, உயிர்கொண்டு வந்து வாழ்ந்திருப்பதே படிப்படியாக மலரும் அறிவின் பொருட்டு மட்டும்தான் என்கின்றன.
மகத்தான நிமிடங்கள்
நம்முடைய வாழ்க்கையின் மகத்தான நிமிடங்கள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் பின்னால் திரும்பிப்பார்த்தால், அவையெல்லாமே நாம் புதியதாக எதையாவது கண்டு, அறிந்து, உணர்ந்த தருணங்கள் என்பதை அறியலாம். முதன்முதலாகப் பார்த்த மலை, முதலில் கண்ட கடல், முதற்காதல், முதல் காமம், முதல் குழந்தையை மார்போடு அணைத்த தருணம்... அதன்பின் எங்கோ அந்த ‘முதல்’ அனுபவம் என்பது நின்றுவிடுகிறது. எல்லாம் பழைய அனுபவங்களாக ஆகிவிடுகின்றன. அங்கே உண்மையில் வாழ்க்கையும் நின்றுவிட்டிருக்கிறது.
சிந்தனையில் இப்படி முற்றிலும் புதிய ஒன்றை எதிர்கொண்டு நிலைகுலைந்த கடைசித் தருணம் எது என்று யோசித்துப்பாருங்கள். நம் கல்லூரிக் காலத்துக்குப் பின் அப்படி ஒரு சலனமே நமக்குள் நிகழ்ந்ததில்லை என உணர்வீர்கள்.
மூளைச்சோம்பல்
புதுச் சிந்தனைகளைத் தவிர்ப்பதற்காக நாம் ஒவ்வொருவரும் ஏராளமான வழிகளைக் கண்டுவைத்திருக்கிறோம். நம்முடையது மூளைச்சோம்பல் மிக்க ஒரு சமூகமாதலால், நம் சூழலிலேயே புதிய சிந்தனைகளைத் தவிர்ப்ப தற்கான ஏராளமான பேச்சுக்கள் புழங்குகின்றன.
முதல் கேள்வி, “இதனால் என்ன பிரயோசனம்? இந்தச் சிந்தனைகளால் நம் உலகியல் வாழ்க்கைக்கு ஏதாவது பயனுண்டா?” வாழ்க்கை என்பது பணத்தை யும் அதிகாரத்தையும் ஈட்டுவது மட்டும்தான் என்ற நம்பிக்கையிலிருந்து எழக்கூடிய கேள்வி இது. அதே கேள்வியை அவர்களிடம் திருப்பிக் கேட்க முடியும். “உங்கள் பிள்ளைகளைப் பணக்காரர்களாக ஆக்கிவிட்டுச் செத்துப் போவதன் வழியாக நீங்கள் அடையும் இன்பம் என்ன?”
அறிதலின் பேரின்பம்
அறிதல் என்பது தன்னளவில் பேரின்பம். நுகர்வு மூலம் அதிகாரம் வழியாக அடையும் போலி இன்பங்கள் எவையும் அதற்கு நிகரல்ல. உலகியலில் உண்மையான இன்பம் என ஏதுமில்லை. ஓர் இன்பத்தை அடைந்ததுமே அது முக்கியமல்ல… அதற்கு அப்பால் உள்ள இன்னொன்றே இன்பம் என்று தோன்றவைத்து, கடைசிக்கணம் வரை ஓட வைத்துக்கொண்டே இருக்கும் ஒரு போதை அது.
என்ன பயன்?
“தேவையில்லாதவற்றை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?” என்பது இரண்டாவது வாதம். “தேவையில்லாதவற்றின் மீது நம் கவனம் நிலைப்பதே இல்லை” என்பதே அதன் பதில். இலக்கியத்தில் ஆர்வம் உடையவன் ஒருபோதும் பங்குமார்க்கெட் நிலவரத்தைக் கூர்ந்து கவனிக்கப்போவதில்லை. ஒவ்வொரு வருக்கும் அவரது அகத்தின் இயல்புக்கு ஏற்ப ஒரு தேடல் உண்டு. அந்தத் தேடலுக்கு விடையாகும் விஷயங்களை மட்டுமே அவரால் கவனிக்க முடியும்.
இவை உலகியல் வினாக்கள். போலி ஆன்மிகத் தளத்திலிருந்து ஒரு வினா எழும். “இந்த மாதிரி எதையெதையோ தெரிஞ்சுக்கிட்டு என்ன ஆகப்போகிறது? மனுஷன் தன்னை அறியணும்... தன்னை அறியறது வழியா பரம்பொருளோட உண்மைய அறியணும்... அதுக்கு இதெல்லாம் தேவையே இல்லை.”
இந்தியாவின் எந்த ஞானமரபிலும் இந்தக் கூற்றுக்கு ஆதரவில்லை. இது வெறுமே மூளைச்சோம்பலுக்குச் சொல்லப்படும் சாக்குப்போக்கு மட்டுமே. பௌத்தம் கூறும் ஓர் உவமை; மனிதக் குலத்தில் எவருக்கும் மேலே நிமிர்ந்து நோக்கி சூரியனைப் பார்க்கும் பார்வை இல்லை என்று வைத்துக்கொள்வோம். மண்ணிலுள்ள பல்லாயிரம் பொருட்களில் ஒளிவிடும் பிரதிபலிப்புகள் வழியாகவே சூரியனைக் கண்டுணர முடியும். பரம்பொருள் என்ற ஓர் ஒற்றை உண்மை இருந்தாலும், நம்மைச் சூழ்ந்துள்ள பல கோடி உண்மைகளை அறிவதன் மூலமே அதை நாம் அறிய முடியும். அறிந்தவர்கள் எல்லாம் அப்படி அறிந்தவர்களே.
மகாதர்மம்
இங்குள்ள ஒவ்வொன்றிலும் உறையும் தர்மம் என்ற மாற்றமில்லா விதியின் ஒட்டுமொத்தப் பேருருவமே மகாதர்மம் என்றுதான் பௌத்தம் சொல்லும். இங்குள்ள அனைத்திலும் உறையும் சாராம்சத்தின் முழுமையே ஈசன் என்று ஈஸோவாஸ்ய உப நிடதம் சொல்லும். இவற்றை அறிவதன் உச்சமே அந்த அறிதல். சின்னச் சின்ன உண்மைகளை எதிர்கொள்வதற்குச் சோம்பல் கொள்ளக்கூடியவர்கள் எப்படிப் பேருண்மையை மட்டும் உள்வாங்கிக்கொள்ள முடியும்?
இருநூறாண்டு காலமாக, பிழைப்பது மட்டுமே வாழ்க்கை என்று நம்பக்கூடிய ஒரு பெருங்கூட்டமாக நாம் மாறிவிட்டிருக்கிறோம். நம் ஒவ்வொரு அறிவுத் துறையிலும் இருக்கும் தரவீழ்ச்சிக்கான காரணம் இதுதான். இதை வெல்ல ஒரே வழி, சிந்தனைக்கு எதிராக நம் சூழல் நம்மிடம் சொல்லும் ஒவ்வொரு சாக்குப்போக்கையும் அறியாமையின் வெற்றுப் பசப்பு என அருவருத்து அகற்றுவது மட்டுமே.
ஜெயமோகன், எழுத்தாளர் - தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com

நன்றி :- தி இந்து , 02-12- 2013
0 comments:
Post a Comment