நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிலாலா தலிபுங்கா மண்டேலா. 1918ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கிழக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் "திம்பு' இனத்தில் பிறந்தார். "மடிபா' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அவருக்கு பள்ளி ஆசிரியர் "நெல்சன்' என்ற பெயரைச் சூட்டினார்.
தனது 23வது வயதில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்பமில்லாமல் ஜோஹன்னஸ்பர்க்குக்கு 1941ஆம் ஆண்டு வந்தார். அங்கு சட்டம் படித்த நேரத்தில் வெள்ளை நிற மக்களின் நிறவெறி பாரபட்சத்தால் பாதிக்கப்பட்ட மண்டேலா, நிறவெறியை ஒடுக்கும் நோக்கில்,ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவைத் தொடங்கினார். குத்துச் சண்டை வீரராகவும் திகழ்ந்தார்.
வழக்குரைஞராக தேர்ச்சி பெற்ற மண்டேலா, 1952ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வரலாற்றிலேயே கருப்பு இன மக்களுக்கான முதல் சட்ட மையத்தை அமைத்தார். 1956ஆம் ஆண்டு தேசத் துரோக வழக்கு மண்டேலா மீது சுமத்தப்பட்டு பின்னர் 4 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
நிறவெறிக் கொள்கையைக் கடுமையாக்கும் வகையில் கருப்பின மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தை மண்டேலா அஹிம்சை வழியில் எதிர்த்தார். 1960ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் பிரிவுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. இதையடுத்து மண்டேலா தலைமறைவானார். பின்னர் போராட்டம் வன்முறைப் பாதைக்குத் திரும்பிய நிலையில் மண்டேலா கைது செய்யப்பட்டார். சிறை வாழ்க்கையின் போதும், நீதிமன்ற வாதங்களின் போதும் தென் ஆப்பிரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக மண்டேலா முன்வைத்த கருத்துகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன.
இதன் காரணமாக 1990ஆம் ஆண்டு விடுதலையான நெல்சன் மண்டேலா அடுத்த மூன்று ஆண்டுகளில் தென்ஆப்பிரிக்காவில் அனைத்து தரப்பினராலும் வாக்களித்து உருவாக்கப்பட்ட ஜனநாயக அரசின் முதல் அதிபர் என்ற பெருமையையும் பெற்றார்.
நன்றி ;- தினமணி, 07 -12 -2013
0 comments:
Post a Comment