சாதனை விற்பனையில் சாமானியர்களின் கதைகள்
சினிமா கதைபோல விறுவிறுப்பாகச் செல்கிறது ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய திருடன் மணியன்பிள்ளை (ரூ.450, காலச்சுவடு) என்ற வாழ்க்கை வரலாற்று நூல். கேரளத்தில் செய்யாத குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெறுகிறான். அதன் காரணமாகவே சிறையில் இருந்து வெளியில் வந்ததும் நுட்பமான முறையில் திருட்டுத் தொழிலைச் செய்கிறான். பிடிபடுகிறான். நீதிமன்றத்தில் காவல்துறையினரே பயம்கொள்ளுமளவுக்கு வாதிடுகிறான். பிறகு தலைமறைவாகி மைசூரில் பாயசக் கடை வைக்கிறான். கர்நாடக மாநில முதல்வருடன் ஒன்றாக ஹெலிகாப்டரில் பறக்கிறான். மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியின் சார்பில் நிற்கிறான். இந்த நேரத்தில் கேரள போலீஸ் அவனைக் கண்டுபிடிக்கிறது. கைது செய்கிறது. பெரும்செல்வந்தன் என்ற நிலையில் இருந்து மீண்டும் தெருவுக்கு வருகிறான் மணியன்பிள்ளை. இது கேரளத்தில் அமோக விற்பனை கண்ட நூல். குளச்சல் மு.யூசப் தமிழாக்கம் செய்துள்ளார். தமிழிலும் அமோகமாக விற்கிறது.
இதேபோன்ற மற்றொரு சாகச வாழ்க்கை வரலாற்று நூல்தான் ஹென்ரி ஷாரியரின் பட்டாம்பூச்சி (ரூ.250, நர்மதா பதிப்பகம்). ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்ப்பு எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதான் சட்டங்கள் இருக்கும்போல. பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த 25 வயது ஹென்ரி ஷாரியரும் செய்யாத கொலை குற்றம் ஒன்றுக்காக அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுகோடி முனையில் உள்ள கயானா தீவில் உள்ள சிறையில் அடைக்கப்படுகிறான். அந்தச் சிறையில் இருந்து தப்பித்து, கடல்மார்க்கமாக, சாதாரணமான கட்டுமரத்திலேயே பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறான். பல இடங்களில் கைது செய்யப்படுகிறான். தப்பிக்கிறான். திருமணம் செய்கிறான். கர்ப்பமான மனைவியை விட்டுவிட்டு ஓடிவந்துவிடுகிறான். சென்னை கடற்கரைக்குக்கூட வந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்கிறான். பிறகு இங்கிருந்தும் தப்பிச் செல்கிறான். தனிமனித சுதந்திரத் தாகமே அவனை ஒவ்வொரு கட்டத்திலும் இருந்து தப்பிச் செல்லத் தூண்டுகிறது. கடைசிவரை நம்பிக்கையை இழக்காத அவனின் இரும்பு மனதுக்காகவே உலகம் முழுவதும் வாசிக்கப்பட்ட நூல் இது.
சசிவாரியரின் தூக்கிலிடுபவரின் குறிப்புகள் (ரூ.200 எதிர் வெளியீடு). தமிழில் ஏற்கெனவே அதிகம் விற்கப்பட்டு வரும் நூல் இது.
குற்றம் செய்தவரைத் தூக்குப்போடும் வேலை செய்த ஜனார்தனன் பிள்ளை என்பவரைப் பற்றிய நூல். திருவிதாங்கூர் மன்னருக்காகவும், விடுதலைக்குப் பிறகு சிறையிலும் தூக்கிலிடும் வேலை செய்துள்ளார். மொத்தம் 117 பேர் அவரால் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகள். தூக்குப் போடுதல் அவர் வேலை. கரிசனத்துக்கு இடமில்லை. உளவியல் ரீதியாகவும் அணுகும் அருமையான நூல் இது.
பெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைவிட, சாகசத் தன்மையுள்ள சாமானியர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களே அதிகம் வாசகர்களால் விரும்பப்படுகிறது. ஏனெனில் சாமானியனியர்களின் வாழ்க்கையே நெருப்பு சுட்டதுபோன்ற உண்மையைக் கூறுகிறது.
தினமணி
0 comments:
Post a Comment