கனவைக் காட்சிப்படுத்திய கலைஞன்
தமிழ் சினிமாவை அருமையான கலை அனுபவமாகவும், அழகனுபவமாகவும் மாற்றியவர்களில் ஒருவர் பாலுமகேந்திரா. இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகர் என்று பல துறைகளில் இயங்கியவர். இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர்களில் இவர் பெயரும் இடம்பெறும்.
1970களின் மத்தியில் இந்தியாவெங்கும் உருவான ‘புதிய அலை’ சினிமா இயக்கத்தின் முகங்களில் ஒருவர் பாலுமகேந்திரா. அதுவரை எடுக்கப்பட்ட வணிக சினிமா வரையறைக்குள்ளேயே எதார்த்தமான கதை சொல்லல், ஒப்பனை குறைந்த முகங்கள், அன்றாட வாழ்வுக்கு நெருக்கமான காட்சிகள், நாடகத்தனம் தவிர்த்த மொழியை சினிமாவில் கையாள வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட புதிய தலைமுறைப் படைப்பாளிகள் சினிமாவின் தலையெழுத்தை மாற்ற முயன்ற காலம் அது. தமிழில் ருத்ரையா, மகேந்திரன், பாரதிராஜா. மலையாளத்தில் பரதன், ஐ.வி. சசி, பத்மராஜன், சேது மாதவன். இந்தியில் மகேஷ் பட், கோவிந்த் நிஹ்லானி போன்றவர்களின் சமகாலத்தவர் பாலுமகேந்திரா. தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்பட உலகில், பின்னர் சாதனை படைத்த முக்கியமான இயக்குநர்களின் முதல் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திரா பணிபுரிந்துள்ளார். தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களாகக் கருதப்படும் மகேந்திரன், மணிரத்னம் ஆகியோரின் முதல் பட ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராதான்.
பாலுமகேந்திரா முப்பதுக்கும் குறைவான படங்களே இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு ஆகிய படங்கள் தமிழ்சினிமா ரசிகர்களின் நினைவில் என்றும் நீங்காமல் இருப்பவை. கதாநாயகன், கதாநாயகி இல்லாமல், நான்கு சிறுவர்களின் பதின் வயதில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்களையும், அபிலாஷைகளையும் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் படமாக்கியிருந்தார்.
மூன்றாம் பிறை படத்தில் காதலியின் ஞாபகத்தை மீட்க, ரயில் நிலையத்தில் நின்று கையறு நிலையில் எத்தனையோ சேஷ்டைகளைச் செய்யும் கமல்ஹாசனின் கையறு நிலையும், கண்ணே கலைமானே தாலாட்டுப் பாடலும் தமிழ் சினிமா உள்ளவரையும் ஞாபகத்திலிருந்து தொலையாதவை.
பாலுமகேந்திரா படங்களின் லொக்கேஷன் எப்போதும் ஒரு கனவுத்தன்மையில் இருக்கும். ஊட்டி, பெங்களூரு போன்ற குளிரும், மலையுமான பிரதேசங்களிலேயே அவரது பல படங்களின் கதைகள் நிகழ்கின்றன.
கதாபாத்திரங்கள் வெறுமனே பேசிவிட்டு நாடகத்தைப் போல வெளியே சென்றுகொண்டிருந்த தமிழ் சினிமாவில், ஒவ்வொரு ஷாட்டிலும் அந்தந்த தருணத்துக்கு ஏற்ற கனத்த மன உணர்வை, சோகத்தை, காதலை, மௌனத்தை உணர்த்திவிடும் காட்சிகள் அவருடையவை. வீடு படத்தில் அர்ச்சனாவுக்கும், பானுசந்தருக்கும் இடையில் நடக்கும் சின்னச்சின்ன சண்டைகள் முழுப்பின்னணியுடன் சேர்ந்து நம்மை சங்கடப்படுத்தும்.
ஒரு சினிமா ரசிகனாக பாலுமகேந்திராவின் தனிப் பங்களிப்பென்று சொன்னால் தமிழ்ப் பெண்களைப் பெரிய ஒப்பனை இல்லாமல் அவர் மிக அழகாக, மெய்யாகவே கவர்ச்சியுடைவர்களாகக் காட்டியதுதான். அவர் அறிமுகப்படுத்திய ஷோபா, அர்ச்சனா, மௌனிகா, வினோதினி என்று அனைவரின் முகங்களும் அவரது நினைவை ஒட்டி நினைவிற்கு வந்து போகின்றன. ஆழமான அர்த்தமுடைய கண்கள், மெல்லிய சோகம், பிரியம் கொண்ட முகங்கள் அவை. பெண்கள் வெவ்வேறு மனநிலைகளில் வெளிப்படுத்தும் குரல் பாவங்களை அதன் பல்வேறு சப்தபேதங்களில் உருவாக்கியவர். கனிவு, விரகம், ஏக்கம், இயலாமை எல்லாவற்றையும் அர்ச்சனா மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
வர்த்தக சினிமா வரையறைக்குள் தன் பெரும்பாலான படைப்புகளை எடுத்திருந்தாலும் யதார்த்தக் கதைகளை மையமாகக் கொண்டு மாற்று சினிமாக்களை எடுக்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவாகவும் ஏக்கமாகவும் இருந்துள்ளது. வணிகப்பட உலகத்திலேயே முடங்கிவிட்டோமே என்ற குற்றவுணர்வும் இருந்துள்ளது. அவரது முக்கியமான திரைப்படங்களான கோகிலா, வீடு ஆகியவற்றின் நெகட்டிவ்கள் அவரது வாழ்நாளிலேயே சிதைந்துபோனது அவருக்கு மட்டும் இழப்பு அல்ல.
ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் ஈழ விடுதலைப் போராட்டமும், 2009 ஈழ விடுதலைப் போரில் நடந்த நிகழ்வுகளும் அவரைக் கடுமையாகப் பாதித்திருந்தன. தன் தாய்மண்ணின் மீதான ஏக்கத்தையும் தாய்மொழியின் மீதான பற்றுதலையும் ‘தலைமுறைகள்’ படத்தில் வெளிப்படுத்தவும் செய்திருந்தார்.
மூன்றாம் பிறை பாடலின் ஆரம்பத்தில் ஸ்ரீதேவி விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் ஒரு அழகிய கடற்கரைப் பாடல் வரும். வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட/ சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்/ நேரம்/ வானில் ஒரு தீபாவளி / நாம் பாடலாம் கீதாஞ்சலி என்று போகும் அந்தப் பாடலின் வரிகள் பாலுமகேந்திரா என்ற கலைஞனின் கனவை உள்ளடக்கியிருக்கும். ஒரு காலகட்டத்தின் அருமையான கனவு அது.
மூன்றாம் பிறை படத்தில் பூங்காற்று புதிரானது பாடலில் ஒரு மரக்கூட்டத்தின் இடையே பொழியும் சூரிய ஒளிக்காட்சியை தியான அனுபவம் போல மாற்றியிருப்பார் பாலுமகேந்திரா. அந்தக் கனவு நிலப்பரப்பில் எப்போதும் இருப்பார் பாலுமகேந்திரா.
தி இந்து
0 comments:
Post a Comment