"தில்லையாடி வள்ளியம்மை', 1898 ஆம் ஆண்டு ஜோஹனஸ்பர்க் நகரில் டூம்பான்டின் என்ற பகுதியில் பிறந்தவர். இவரது தாயார் - மங்கலம் என்ற ஜானகி தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்றவர். இவரது தகப்பனார் - முனுசாமி முதலியார் பாண்டிச்சேரியிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்றவர். இவர்கள் காய்கறி விற்பனை செய்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். வள்ளியம்மாவின் பிறந்த நாள் 22 எனவும், பிறந்த மாதம் பிப்ரவரி எனவும் குறிப்பு ஒன்று உள்ளது.
வள்ளியம்மை அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்பொழுது காந்தியடிகளால் கவரப்பட்டு தீவிர நாட்டுப்பற்று காரணமாக அவரின் போராட்டங்களில், இவரது பெற்றோர்களைப்போலவே பங்கு கொள்வதில் ஆர்வமாக இருந்தார். காந்திய இயக்கத்தில் சிறுமியாக இருக்கும்பொழுதே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். முதன்முறையாக 1913-இல் நடைபெற்ற போராட்டத்தில் பங்கு பெற்றார்.
இவர் அரசு ஆரம்பப் பள்ளியில் பல இன குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் பள்ளியில் பயிலும்பொழுது படிப்பிலும், நடனம், சங்கீதம் ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயின்றார்.
இவ்வுலகில் 16 ஆண்டுகள் வாழ்ந்த இவ்வீரச் சிறுமி காந்தியடிகளின் சாத்வீக மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு, மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார். சிறையில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு விடுதலையான 11-ஆவது நாளில் 22-02-1914-இல் அமரத்துவம் பெற்றார்.
இவரைப்போலவே, சிறையிலிருந்து வெளிவந்தவுடன் அகமது முகமது என்பவரும் சாமி நாகப்பன் என்பவரும் அமரத்துவம் பெற்ற இளம் (20 வயதிற்குட்பட்ட) பிராயத்தினராவர். தில்லையாடி வள்ளியம்மையுடன் காந்தியடிகளின் துணைவியார் கஸ்தூரிபாவும் முதன்முறையாக இதர தமிழ் மகளிருடன் சிறைத் தண்டனை அனுபவித்தார். கஸ்தூரிபா 30 ஆண்டுகள் கழித்து, இதே பிப்ரவரி மாதம் 22-ஆம் நாள் அமரத்துவம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை 21 ஆண்டுகள் வரை வாழ்ந்து இறுதியில் 1914-இல் நாடு திரும்பும் முன்னர், அங்கு இவர் செய்த கடைசித் தொண்டு வள்ளியம்மைக்கும் சாமி நாகப்பனுக்கும் நினைவுச்சின்னம் அமைத்து திறந்து வைத்ததாகும்.
வள்ளியம்மையின் உடல் ஜோஹனஸ்பர்கில் உள்ள ""பிராம்பாண்டின்'' இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குழுமியிருந்தனர். நிறவேற்றுமை அமல் காரணமாக இவரது சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடம், சிதைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா விடுதலை பெற்ற பிறகு 1997-இல் தென்னாப்பிரிக்காவின் தேசிய கீதம் ஆக்கிய ஈனேஸ்சன்டோங்க என்ற பிரபல போராளியின் கல்லறைக்குப் பக்கத்தில் வள்ளியம்மைக்கும், கல்லறை எழுப்பப்பட்டது. இந்தியாவின் முதலாவது ஹை கமிஷனரும் காந்தியடிகள், இராஜாஜி ஆகியோரின் பேரனுமான கோபால் கிருஷ்ண காந்தியின் அரிய முயற்சியால் இது மீள அமைக்கப்பட்டது. சாமி நாகப்பன் என்பவரின் கல்லறையும் இதே சமயத்தில் மீள அமைக்கப்பட்டது.
வள்ளியம்மையின் கல்லறையின் மீது "திருக்குறள்' ஒன்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
1997-இல் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் முதலாவது ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்கத் தலைவர்கள் வால்டர் சிகிலு போன்றவர்கள் காந்தியவாதி வள்ளியம்மைக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். இத்தருணத்தில் நெல்சன் மண்டேலா - வள்ளியம்மையின் புகைப்படத்தின் கீழ் இவரது கையொப்பத்தை இட்டு 13-4-97 எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
வள்ளியம்மை இவரது பெற்றோருக்கு மூத்த பெண். இவருக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கையும் உண்டு. இவரது தங்கை குறித்து விவரம் அறிய முடியவில்லை. இவரது தம்பிமார்களின் குடும்பத்தினர்கள் - பக்கிரி முதலியார் இவரது துணைவியார் லட்சுமி. இவர்களுக்கு ஆறு மகன்களும், இரண்டு மகள்களும், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள், பேத்திகள் உள்ளனர். இவரது இரண்டாவது தம்பி - ஆறுமுக முதலியாருக்கு 3 மகன்களும் 1 மகளும் உண்டு. இவர்களில் 76 வயது மகள் மட்டுமே தற்பொழுது எஞ்சியுள்ளார்.
இவர்களின் பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள் இப்பொழுது ஜோஹனஸ்பர்க் அடுத்துள்ள லெனீசியா மற்றும் லாடியம் என்ற இடங்களில் வசித்து வருகின்றனர். வள்ளியம்மையின் தம்பி பக்கிரி முதலியாரின் கொள்ளுப்பேரன் பிரெக முனுசாமியும் (வயது 57), இவரது துணைவியார் ரதி முனுசாமி (வயது 50), மகள்கள் பிரனிதா முனுசாமி (வயது 30), சரிஷா முனுசாமி (வயது 23) தத்தம் முன்னோர்களின் பிறந்த பூமிக்கு முதன்முறையாக 22-02-2014-இல் இந்தியா வருகை தந்து தில்லையாடியில் அனுசரிக்கப்படும் வள்ளியம்மாவின் அஞ்சலியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு கொண்டாட்டம், தினமணி.
0 comments:
Post a Comment