உலக மக்கள் தொகையான 650 கோடியில் 100 கோடி பேர் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு நிறுவனம் தெரிவிக்கின்றது. வளர்ச்சி அடைந்துவரும் 120 நாடுகளில் ஆராய்ந்து இந்த அதிர்ச்சித் தகவலை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக அந்த நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் ஊட்டச் சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதத்தையும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய எடை இல்லாதோர் விகிதத்தையும் கொண்டு நடத்திய ஆய்வில் நம் இந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் 40 சதவீதத்தினர் எடை குறைந்தவர்களாகவும் 6.1 சதவீதக் குழந்தைகள் 5 வயதிற்குள் இறக்கின்ற நிலையும் காணப்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
நமது நாட்டின் ஒட்டு மொத்த உணவுதானிய உற்பத்தி 2011-12இல் 25.74 கோடி டன்; 2012-13இல் 25 கோடி டன். 2012-13 (ஜூன், ஜூலை) பருவத்தில் கோதுமை உற்பத்தி 9.39 கோடி டன்னாக உயரும் எனவும், தானியக்கிடங்குகளில் இட நெருக்கடி மேலும் தீவிரமடையும் எனவும் அமெரிக்க வேளாண்துறையின் அண்மைக்கால ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்
ளது (தற்போது அரசு கிடங்குகளில் 7.10 கோடி டன் அரிசி கோதுமை கையிருப்பு உள்ளது).
டிசம்பர் 2000இல் அந்த்யோதயா அன்னயோஜனா திட்டத்தை வாஜ்பாய் அரசு செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் விரிவுதான் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம். 26-08-2013 அன்று நிறைவேற்றப்பட்ட மசோதா அமலாக்கப்பட்டால் நாட்டில் சுமார் 82 கோடி மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்றும் 6.2 கோடி டன் அரிசி, கோதுமை மற்றும் சிறுதானியங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
அதுபோன்ற இன்னபல திட்டங்கள் (மதிய சத்துணவுத் திட்டங்கள் போன்று) தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் முன்பே நடைமுறையில் உள்ளன. பொது விநியோகத் திட்டமும் செயல்பட்டு வருகின்றன.
இத்தனை திட்டங்கள் செயல்பட்டு வந்தாலும், சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான் வேதனையான செய்தி. இன்று இந்தியாவில் வறுமைக்கும் பட்டினிக்கும் முக்கிய காரணமாக இருப்பது, இந்தியாவில் வேளாண்மைத் தொழில் நலிவடைந்து கொண்டே செல்வதும், புறக்கணிக்கப் படுவதும்தான்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைத் துறையின் பங்கு 2004-05இல் 19 சதவீதம். இது 2012-13இல் 13.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வேளாண்மைத் துறையின் பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2013-14இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைந்ததற்கு காரணத்தையும் கூறியுள்ளனர் நிபுணர் குழுவினர். முக்கியமாக வேளாண்துறையிலும், சுரங்கத் துறையிலும் காட்டிய மெத்தனப் போக்கே காரணம் என ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.
ஐ.நா.வின் எஃப்.ஏ.ஓ.வின் அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.5 சதவீதம். நிலப்பரப்பளவில் 2.3 சதவீதமாக உள்ளதால் வேளாண் உற்பத்தி அதிகரிப்பில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொருளியல் வல்லுநர்கள் வற்புறுத்துகின்றனர்.
விவசாய நாடு என்ற பெருமையை இந்தியா சிறிது சிறிதாக இழந்து வருகின்றது. 2001 மற்றும் 2011ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் மட்டும் 8,67,582 தமிழக விவசாயிகள் விவசாயத்தை கை விட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த கிராமங்களில் 338 கிராமங்கள் மறைந்து நகரங்களாக மாறியதும், மாறாக தமிழ்நாட்டின் நகர்ப் பகுதிகள் 832லிருந்து 1097 ஆக அதிகரித்துள்ளதும் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வருகின்றது.
நாளுக்குநாள் மக்கள் தொகை பெருகிக் கொண்டேவரும் இந்தியாவில் உணவுப் பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. ஆனால்,
பருவநிலை மாற்றங்களினால் போதிய மழையின்மை.
விளைநிலங்கள் விலை நிலங்களாகவும் தரிசாகவும் மாறுவது.
வேளாண் இடுபொருள்களின் விலை உயர்வு.
நீர் ஆதாரங்கள் குறைந்து போனது.
சீரற்ற மின் விநியோகம் மற்றும் பற்றாக்குறை.
விவசாய கூலியாட்கள் பற்றாக்குறை.
விளைவித்த பொருள்களுக்கு கட்டுபடியான விலைவாசி கிடைக்காதது.
விளைபொருள்களை சேமித்துவைக்க சரியான கிடங்கு வசதிகள் இல்லாமை.
போன்றவைகள் உணவுப் பொருள் உற்பத்தியைக் கடுமையாக பாதிக்கின்றது.
உணவுப் பொருள்கள் சீராக விநியோகம் செய்யத் திட்டம் தீட்டப்படாததும், ஊக பேர வணிகமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மக்கள் வாங்கும் சக்தியின்றி பட்டினிச் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதனாலேயே 40 சதவீதம் குழந்தைகள் நிறைகுறைந்தவர்களாகவும் அதில் 6.1 சதவீத குழந்தைகள் மரணத்தை நோக்கியும் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
விளைநிலங்கள் விலைநிலங்களாக ஆவதை முழுமையாகத் தடுக்க வேண்டும். விவசாயத் தொழிலை விட்டு நகர்ந்தவர்கள் மீண்டும் விவசாயத்திற்குத் திரும்பும் விதத்தில் அரசு அவர்களுக்குப் போதிய வசதிகளைச் செய்துதர வேண்டும்.
கருத்துக்களம் - தினமணி
0 comments:
Post a Comment