மார்க்சியவாதியாகப் பரவலாக அறியப்படும் கோவை ஞானியின் "தமிழ்நேயம்' இதழில், "தமிழ் நாகரிகத்துக்கு என்ன எதிர்காலம்?' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையும் அதற்கு பல சிந்தனையாளர்கள் எழுதிய எதிர்வினைகளும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவருடைய கட்டுரை தமிழின் தொன்மை குறித்து முதலில் பேசுகிறது. இதையடுத்து, தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் தற்போதைய வாழ்நிலை, அதன் வீழ்ச்சி குறித்து பேசுகிறது. தமிழ் தேசிய உருவாக்கம் எப்படி கனவாகிப் போனது என்பது குறித்து கவலை கொள்கிறது. 90-களில் நிகழ்ந்த உலகமயமாதல், சோவியத் வீழ்ச்சி, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சுரண்டல், முதலாளிகளின் பேராசை, அரசியல்வாதிகளின் ஊழல், சுற்றுச்சூழல் சீரழிவு எல்லாம் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை எப்படிச் சீரழித்தன என்பது குறித்தும் பேசுகிறது.
"தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்கிற கூட்டாட்சி என்ற முறையில் மாநிலங்களின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு மைய அரசு என்ற ஒன்று இந்தியாவில் ஏற்பட்டிருக்குமானால், தமிழகமும் தனக்கான இறையாண்மையைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும்' என்ற அவரது அரசியல் தீர்வு கட்டுரையில் முன் வைக்கப்படுகிறது. மனசாட்சியற்ற நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை எதிர்க்கும் கோவை ஞானி, மரபு சார்ந்த தொழில்களை, மருத்துவத்தை, கலைகளை வலியுறுத்துகிறார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 100 தாய்த்தமிழ் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்கிறார். மேலும் அமெரிக்க ஆதிக்கத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். ஞானியின் இக்கட்டுரைக்கான 23 பேரின் எதிர்வினைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கோவை ஞானி
தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்? - கோவை ஞானி; பக்.160; ரூ.120; புதுப்புனல், பாத்திமா டவர் (முதல் மாடி), ரத்னா கபே எதிரில், சென்னை-5.
தினமணி
0 comments:
Post a Comment