தமிழின் முதல் நாவலாசிரியராகிய ச. வேதநாயகம் பிள்ளைக்கு மரபு இலக்கிய முகம் அமைந்தமைக்குப் பின்புலம் இருந்ததைப் போலவே நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம் உருவானமைக்கும் பின்னணி உண்டு. அவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள் உருவாகவில்லை. 1826ஆம் ஆண்டு அவர் பிறந்தார். 1857ஆம் ஆண்டுதான் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. நிறுவனங்கள் வழியான முறைசார் கல்வியை அவர் பயில வாய்க்கவில்லை.
திண்ணைப் பள்ளியில் தமிழைக் கற்ற அவர் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த தியாகப்பிள்ளை என்பவரிடம் ஆங்கிலம் கற்றார் எனத் தெரிகிறது. ஆங்கிலத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற அவருக்கு 22ஆவது வயதில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளர் வேலை கிடைத்தது. அதற்குத் தியாகப்பிள்ளையின் பரிந்துரை உதவியது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அங்கேயே மொழிபெயர்ப்பாளர் பணி கிடைத்தது.
நீதிபதிகள் ஆங்கிலேயர்கள். வழக்குக்குத் தொடர்பானவர்கள் தமிழர்கள். ஆகவே தமிழிலிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் என இருவகை மொழிபெயர்ப்பையும் அவர் செய்தார். இப்பணி இருமொழிப் பயிற்சி அவருக்கு ஏற்பட உதவியதோடு உரைநடை எழுதும் பயிற்சியையும் வழங்கியது.
ஆங்கில மொழிக் கல்வி இல்லாத அக்காலத்தில் தீர்ப்புகளை மக்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் 1805ஆம் ஆண்டு முதல் 1861வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளைத் திரட்டித் தமிழில் தந்தார். ‘சித்தாந்த சங்கிரகம்’ என்னும் அந்நூல் 1862இல் வெளியாயிற்று. சித்தாந்தம் - சட்டம், சங்கிரகரம் - தொகுப்பு என்னும் பொருளுடைய ‘சட்டத் தொகுப்பு’ நூல் அது. 1862, 1863 ஆகிய ஆண்டுகளின் தீர்ப்புகளையும் மொழிபெயர்த்து 1864இல் நூலாக வெளியிட்டார். சட்டம் பற்றித் தமிழில் வெளியான முதல் நூல்களான இவை நாவல் முன்னோடியாக மட்டுமல்ல, சட்டத் தமிழ் முன்னோடியாகவும் வேதநாயகம் பிள்ளையை நமக்குக் காட்டுகின்றன. இவையே அவர் எழுதிய முதல் உரைநடை நூல்கள். ஆனால் இவை இப்போது கிடைக்கும் இடம் தெரியவில்லை. நூல்களைக் கண்டுபிடித்தால் அவை சட்டத்தமிழ் தொடர்பாக மட்டுமல்லாமல் பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை வரலாற்றுக்கே முக்கியமான பங்களிப்பாக அமையும்.
பெண் கல்வி (1869), பெண் மானம் (1870) ஆகியவையும் நாவலுக்கு முன் அவர் எழுதிய உரைநடை நூல்கள். இவை இப்போதும் கிடைப்பவைதான். இவற்றில் அவர் கையாண்டிருப்பது எளிய உரைநடை.
‘புல்லுண்ணாத பசுவும் வேண்டும்; பூரணமாகக் கறக்கவும் வேண்டும்’ என்பது போலவும் ஸ்திரீகள் படிக்காதவர்களாயிருக்கவும் வேண்டும், உத்தமிகளாய் நடக்கவும் வேண்டும் என்றால் எப்படி நம்முடைய மனோரதம் நிறைவேறும்? மாவுக்கும் ஆசை, பணியாரத்துக்கும் ஆசையா?’ (பெண் கல்வி, ப.52)
இதில் காண்பதைப் போன்ற பழமொழிகள் அவர் நடையில் தாராளமாகப் புழங்கும். அவர் எழுத்துக்களில் காணப்படும் பழமொழிகளை மட்டும் தொகுத்தால் அக்காலத்தில் வழங்கிய பழமொழிகளின் பெருந்தொகுப்புக் கிட்டும். இனி வருவது உரைநடையின் காலம் என்னும் தெளிவும் அவருக்கு இருந்திருக்கிறது. ஆகவேதான் ‘பெண் மதி மாலை’ எனச் செய்யுளில் எழுதிய அவர் பெண் தொடர்பான பிற நூல்களை உரைநடையில் எழுதினார். தமிழில் உரைநடை நூல்கள் இல்லை என்னும் குறைபாட்டைப் போக்கவே பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். உரைநடையில் எழுதும் தம் முயற்சி புதியது என்னும் உணர்வும் அவருக்கு இருந்தது.
பிரதாப முதலியார் சரித்திரத்தை உரைநடையில் எழுதக் காரணம் தாம் செய்யுள் நூல்களில் எழுதிய கருத்துக்களைக் கதை வடிவில் உரைநடையில் தந்தால் பொதுமக்கள் ரசனையுடன் வாசிப்பார்கள் என்றும் எண்ணியுள்ளார். உரைநடையின் பக்கம் அவர் பார்வை திரும்பியதற்கு அவரது தொழில் சார்ந்தும் எழுத்து சார்ந்தும் வாசகர்கள் என்னும் பொதுமக்கள் சார்ந்தும் ஏற்பட்ட நவீன உணர்வே காரணம். இவை ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலில் துலக்கமாகத் தோன்றுவதைக் காணலாம்.
தி இந்து
0 comments:
Post a Comment