தி.க.சி. என்று அறியப்படும் திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் (89) மூத்த இலக்கியச் செயற்பாட்டாளர். திருநெல்வேலி இலக்கிய வட்டத்தின் முக்கியப் பெயர்.
வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோர் இவரது சகாக்கள். முற்போக்கு இலக்கியவாதிகளின் பிசிறில்லாத வழிகாட்டி. பிரபஞ்சன், கந்தர்வன், வண்ணநிலவன், பூமணி போன்ற சாதனை படைத்த எழுத்தாளர்கள் பலருக்கும் ‘தாமரை’ இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மேடை அமைத்துத் தந்தவர்.
விமர்சனமும் கரிசனமும் - பொ. வள்ளிநாயகம்
72 ஆண்டுக் கால இலக்கிய அனுபவத்தை உடைய அவரது மறைவு எண்ணற்ற எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் பெரிய இழப்பு.
அடிப்படையில் மனிதத்தன்மை வற்றிப் போகாத ஊற்றுக்கண்ணாக திகழ்ந்த அவருடன் மிக நெருக்கமாகக் கடைசிக் காலம் வரையில் உடனிருந்தவர் திருநெல்வேலி டவுனில் உள்ள மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் பொ. வள்ளிநாயகம். அவர் தி.க.சி.யுடனான தனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
2004-ம் ஆண்டில் திருநெல்வேலி டவுனில் உள்ள சுடலைமாடன் தெருவுக்குக் குடிபுகுந்தோம். இளசை அருணாசலமும் உடையார்பட்டி இசக்கி அண்ணாச்சியும் தி.க.சி. இருக்கும் தெருவிலேயே வீடு கிடைத்துவிட்டதே என்று சந்தோஷப்பட்டார்கள்.
எனக்கும் தி.க.சி. ஐயாவுக்கும் அப்போது அவ்வளவு தொடர்பில்லை. ஏனெனில் வாசிப்பு என்ற விஷயத்தில் என் வீட்டில் அண்ணன் நெல்லை நாயகம்தான் நூலகத்தையும் புத்தகங்களையும் அதிகம் பயன்படுத்துவார். கலை இலக்கியவாதிகளின் அறிமுகமும் தொடர்பும் எனது துறை சார்ந்ததால் எனக்கும் பின்னர் ஏற்பட்டது.
ராமையா பிள்ளை புத்தகக் கடையிலும் லேனா பேப்பர் மார்ட்டிலும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டபின் தி.க.சி.யுடன் தொடர்பு அதிகமாயிற்று. அதிலிருந்து கடைசிவரை என்னைத் தனது குடும்பத்தில் ஒருவராகவே பாவித்தார்.
2006 வாக்கில் தி.க.சி.யின் மனைவி தெய்வானை அம்மாளுக்கு உடல்நலம் குறைந்தபோதிலிருந்து தினம் அவரது வீட்டுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவரது அறையிலிருந்து அவர் எழுதுவதும், நான் வரைவதும் பேசுவதுமாய்த் தொடர்ந்தது. அவரது மனைவியைப் பார்க்க வரும் குடும்பத்தாரிடமும், உறவினர்களிடமும் என்னை அதிகம் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
தெய்வானை அம்மாள் இறந்த பிறகும் தி.க.சி., 21 இ, சுடலைமாடன் தெருவிலேயே குடியிருக்க முடிவுசெய்தார். நானும் அதே தெருவில் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தி.க.சி.யுடன் இருப்பது என்பது வாடிக்கையானது. எழுத்து வேலை, வாசிப்பு வேலை, தொலைபேசித் தொடர்பு வேலை எனப் பிரித்துப் பிரித்து தினமும் செய்துகொண்டிருந்தார். வீட்டுக்கு வருகைதரும் நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்கி, அவர்களது பணியை விசாரித்து, விமர்சித்து, தேவைப்பட்டால் மீண்டும் சந்திக்கச் சொல்வார். இப்படியான தி.க.சி.யின் பணிகளுக்குள் எனக்கும் ஒரு பங்கு உருவானது.
காலை மாலை தவிர பகலில் தபால் போட மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வருவது தி.க.சி.யின் வழக்கம். மிகவும் தேவைப்பட்டால் தவிர தொலைபேசி செய்ய மாட்டார். வீட்டுக்கு வருகின்ற இதழ்களில் கட்டுரைகளை சில நேரங்களில் வாசிக்கச் சொல்லிக் கேட்டதுண்டு. எந்த நபர் வந்தாலும் வேலை ஏதாவது செய்துகொண்டிருந்தால் ஒரு நிமிடம் இருங்களேன் என்று அமரவைத்துவிட்டு எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு வந்தவர்களிடம் வந்த விஷயம் பற்றி விவாதிக்கவோ பேசவோ அமர்ந்துவிடுவார். வந்தவர்கள் திரும்பும்போது வாசல்வரை வந்து வழி அனுப்புவார்.
அநேகமாக வருகின்ற எழுத்தாளர்கள் அனைவரும் அவர் பேசுவதைத்தான் கேட்க வருவர். ஆனால் பேச வந்தவர்களிடம் விஷயத்தைத் தெளிவாகச் சொல்லச் சொல்லித் தன் கருத்தையும் தீர்க்கமாக சொல்லுவார்.
தனது குருநாதர் வல்லிக்கண்ணன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். வல்லிக்கண்ணன் பிறந்த நாளில் நான் வரைந்த ஓவியத்தை தி.க.சி. தனது வீட்டில் மாட்டி வைத்துவிட்டார். அதை வருவோரிடம் காண்பித்து மகிழ்வதும் உண்டு.
தி.க.சி.யின் பரந்த உலகம் ஒரு தனியான அறையில் இருந்து தொடங்கி எங்கும் வியாபித்துக் கிடந்தது. வருகைதரும் அனைவரிடமும் அவர்களுக்கு ஏற்ற வகையில் ஏதாவது ஒரு ஊக்கத்தை அளிப்பதை அவர் தவறவிடுவதில்லை. ஒவ்வொரு படைப்பாளியும் தன்னைச் சந்தித்த பின் சிறு முன்னேற்றமாவது அடைந்துகொள்ள வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தவர் தி.க.சி. அவரது விமர்சனத்தில் அந்தக் கரிசனம் இருந்தது. அதனால்தான் தமிழகம் எங்குமிருந்தும் 21 இ, சுடலைமாடன் தெருவைத் தேடி எழுத்தாளர்களும் கவிஞர்களும் வந்து தங்களைப் புதுப்பித்துக் கொண்டனர்.
தி.க.சி. மூன்று விஷயங் களை எழுத்தாளர்களிடம் வலியுறுத்துவார். அறம், அழகியல், அறிவியல். ஒருவர் எல்லாக் காரியங்களிலும் சாதிக்க முடியாது. ஆனால் ஏதோ ஒன்றைச் சாதிக்காமல் ஒரு படைப்பாளி சென்று விடக்கூடாது என்பதுதான் தி.க.சி.யின் எதிர்பார்ப்பாகக் கடைசிவரை இருந்தது.
கேட்டு எழுதியவர்: அ.அருள்தாசன்
தி இந்து
0 comments:
Post a Comment