பீட்டர் ஆக்லே
நீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் மறைந்துவிட்டார். யூடியூப் நட்சத்திரம் ஒன்று விடைபெற்று விட்டது.
உங்களில் சிலர் பீட்டர் ஆக்லேவை அறிந்திருக்கலாம். பலர், யார் இந்த இணைய தாத்தா என்று கேட்கலாம். இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற முதியவரான பீட்டர் ஆக்லே இளைஞர்களின் கூடாரம் என கருதப்படும் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நுழைந்து வீடியோ வழியே இக்காலத்து மொழியில் பேசி , யூடியூப்பாளர்களால் இணைய தாத்தா என கொண்டாடப்பட்டவர்.
புற்று நோயுடன் போராடி மறைவதற்கு முன்பாக ஆக்லே 400 க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்.அவரது வீடியோக்கள் மொத்தமாக கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் யூடியூப்பில் அதிகம் பிரபலமானவராக (அதிக சந்தாதாரர்கள்) அவர் இருந்தார். இந்த உலகை விடைபெற்று செல்லும் போது கூட அவருக்கு யூடியூப்பில் 43,000 சந்ததாரர்கள் இருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிறந்த ஆக்லே, வயோதிகத்தில் கடந்த கால அனுபவத்தை திரும்பி பார்த்து அவற்றை இக்கால தலைமுறையுடன் பகிர்ந்து கொண்டு, இணைய உலகில் தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
பெரியவர் பீட்டர் ஆக்லேவை இணையப்புகழ் பெற்றவர்களில் முக்கியமானவராக குறிப்பிட வேண்டும். இன்டெர்நெட் என்றாலே நமக்கானது இல்லை என்று ஒதுங்கி கொள்ளும் வயதானவர்கள் மத்தியில், ஆக்லே அதை ஆர்வத்தோடு அரவணைத்துக்கொண்டு வெற்றியும் பெற்றார். யூடியூப் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஆக்லே, வயோதிகமும் தனிமையும் வாட்டிய காலத்தில் தனக்கான இளம் ஆதரவாளர்களை தேடிக்கொண்டதோடு, இக்காலத்து தலைமுறையுடன் அவர்களுக்கு புரியும் மொழியில் உரையாடலில் ஈடுபட்டு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அவரது வீடியோக்கள் ஒரு வயதானவரின் அலுப்பூட்டம் அறிவுரையாகவோ, முதியவரின் புலம்பலாகவோ இல்லாமல் சுவாரஸ்யமும், புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக இருந்தது. அதுவே அவரை இணையம் கொண்டாடிய தாத்தாவாக உருவாக்கியது. இணையத்தில் பேச வேண்டிய மொழியை ஆக்லே தாத்தா நன்றாக அறிந்திருந்தார். அவரது யூடியூப் வீடியோக்கள் எதுவும் 2 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததில்லை. சராசரியாக 5 நிமிடத்திற்குள் அவர் வீடியோவில் தான் சொல்ல வந்ததை முடித்துக்கொண்டார்.
இந்த வீடியோ வழியே அவர் தனது இளமைக்கால அனுபவம் துவங்கி எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், திருமண வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றை வீடியோவில் பேசியவர், கல்வி, வயோதிகம் போன்ற பொதுவான விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு வீடியோவும் ஆயிரக்கணக்கானோரால் பார்த்து ரசித்து பாராட்டப்பட்டுள்ளது.
இவ்வளவு ஏன், யூடியூப்பில் அவர் அடியெடுத்து வைத்த முதல் வீடியோவே ஹிட்களை அள்ளி அவரை நட்சத்திரமாக்கியது. 2006ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆக்லே தனது முதல் வீடியோவை பதிவேற்றினார். இது கொஞ்சம் ஆச்சர்யமானது தான். ஏனெனில் யூடியூப்பே அப்போது தான் அறிமுகமாகியிருந்தது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமான அந்த தளத்தில் இளசுகள் உருவாக்கிய வீடியோக்கள் தான் குவிந்திருந்தன. அந்த காலகட்டத்தில் யூடியூப் என்றால் என்ன என்று இணையவாசிகள் பலருக்குமே கூட புரியாத நிலையில், ஆக்லே யூடியூப்பில் அடியெடுத்து வைத்தார். இங்கு ஆக்லேவின் வாழ்க்கை பற்றி சில குறிப்புகள்.
பீட்டர் ஆக்லே, இங்கிலாந்தின் நார்விச் நகரில் 1927 ஆக்ஸ்ட் மாதம் பிறந்தவர். 18 வயதில் அவர் கடற்படையில் ரேடார் டெக்னிஷியனாக சேர்ந்தார். பின்னர் அவர் பேட்ரிசியாவை திருமணம் செய்து கொண்டார். தன் வாழ்க்கையில் மனைவி மற்றும் பைக்குகளை தான் அவர் மிகவும் நேசித்திருக்கிறார். 1990களின் இறுதியில் மனைவி பேட்ரிசியா இறந்துவிடவே ஆக்லே அது வரை இல்லாத தனிமையை அனுபவிக்கத் துவங்கினார். இந்த தனிமைக்கு மருந்தாக தான் அவர் இணையத்தை நாடி வந்தார்.
2006, ஆகஸ்ட் 5ம் தேதி அவர், 'முதல் முயற்சி' (First Try) எனும் பெயரில் முதல் வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றினார். காமிராவைk கூட சரியாக பார்க்காமல் பேசியவர், "நான் யூடியூப்பிற்கு அடிமையாகி விட்டேன் என்று துவங்கி, இளைஞர்கள் உருவாக்கும் ஆயிரக்கணக்கான வீடியோக்களை பார்க்ககூடிய இந்த அற்புதமான இடத்தில் நானும் என் வீடியோவை இடம்பெற வைக்கலாம் என நினைக்கிறேன்" என கூறியிருந்தார். 2 நிமிடம் மட்டுமே ஓடும் அந்த வீடியோ யூடிப்பில் அபார வரவேற்பை பெற்றது. முப்பது லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டது. அது மட்டுமா, யூடியூப்பில் இளசுகள் அவரை உற்சாகமக வரவேற்று கருத்தும் தெரிவித்தனர். பத்தாயிரம் பின்னூட்டங்களுக்கு மேல் குவிந்தன.
இந்த வரவேற்பால் திக்குமுக்காடிய ஆக்லே தொடர்ந்து வீடீயோ மூலம் தனது அனுபவங்களை வெளியிட்டார்.
யூடியூப்பில் எப்படி அலுப்பூட்டாமல் பேச வேண்டும் என்பதை ஆக்லேவைப் பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். தனது வாழ்க்கை அனுபவங்களை நீட்டி முழக்காமல், சுருக்கமாக கூறியதோடு அதை சுவாரஸ்யமாக்கும் வகையில் ஒரு கதை அல்லது நிகழ்வுடன் இணைத்து சொல்லி வந்தார். 'டெல்லிங் இட் ஆல்' எனும் தலைப்பில் வெளியான இந்த வீடியோக்களை ஆயிரக்கணக்கானோர் விரும்பி பார்த்தனர்.
ஆக்லேவின் இணைய புகழ் அவரே எதிர்பாராதது. ஆரம்பத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல் அவர் தவிர்த்திருக்கிறார். அவர் 'ஜெரியாட்ரிக் 1927' எனும் பெயரிலேயே யூடியூப்பில் அறிமுகமானார். அதே பெயரிலேயே வீடியோவிலும் பேசினார். யூடியூப்பில் இளைஞர்களுக்கு போட்டியாக அவர் கலக்குவதை பார்த்ததும், மீடியா அவரைப் பேட்டி காண முற்றுகையிட்டது. துவக்கத்தில் இதற்கு ஆக்லே மறுத்து விட்டார். பின்னர் பல மாதங்கள் கழித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
இணையப் புகழுடன் ஒதுங்கி விடாமல் தொடந்து சீராக அவர் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். மொத்தம் 435 வீடியோக்களை பதிவேற்றியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பிப்ரவரி மாதம் கடைசி வீடியோவை பதிவேற்றினார். அநேகமாக இது தான் கடைசி வீடியோவாக இருக்கும் என்பது போல இறுதி குட்பையும் சொல்லியிருந்தார்.மார்ச் 23 ல் அவர் உயிர் பிரிந்தது.
யூடியூப் தளத்தில் அவரது சேனலுக்குள் எட்டிப்பார்த்தால் அவரைப்பற்றிய நெகிழ்ச்சியான நினைவுகளை அவரது இணைய பேரன்கள் பகிர்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.
யூடியூப் இந்த சமூகத்தை பிரதிபலிப்பதாக ஆக்லே நம்பினார். அதுவே அவரை உலகம் முழுவதும் உள்ளவர்களோடு நேரடியாகப் பேசி நெருக்கமான தொடர்பை வளர்த்துக்கொள்ள வைத்தது.
பீட்டர்ஆக்லேவின் யூடியூப் பக்கம்: http://www.youtube.com/user/geriatric1927]
பீட்டர் ஆக்லேவின் இணையதளம்: http://askgeriatric.com/
சைப்பர்சிம்மனின் வலைத்தளம் http://cybersimman.wordpress.com/
தி இந்து
பீட்டர் ஆக்லே பற்றிய சிறப்புகளுக்கு நன்றி...
ReplyDelete