நடந்திருப்பது காங்கிரஸ் அழித்தொழிப்பா?
பல காரணங்களால் இந்தத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் காங்கிரஸைப் பொறுத்தவரை இது வரலாறு காணாத தோல்வி. சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன் 1984 பொதுத் தேர்தலில் 400 சொச்சம் இடங்களை வென்ற காங்கிரஸ் இன்று நாற்பது சொச்சம் என்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தேர்தல் தொடங்கும் முன்னரே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பது அதன் பல முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதிலேயே தெரிந்தது. சோனியா, ராகுல், கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, சசி தரூர் போன்ற ஒரு சில தலைவர்களைத் தவிர்த்து பிற தலைவர்கள் பெரும் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.
நெருக்கடிநிலைக்குப் பிறகு வந்த 1977 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி பெரும் தோல்வியைத் தழுவியபோதிலும் தென்னிந்திய மாநிலங்கள் கைகொடுத்ததன் காரணமாக சுமார் 150 இடங்களைப் பெற முடிந்தது. இந்த முறை கேரளாவைத் தவிர்த்து, காங் கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்ட அசாம் உட்பட எந்த மாநிலமும் ‘கை’கொடுக்கவில்லை. ஆக இப்போது நிகழ்ந் திருப்பது படுதோல்வி என்பதற்கும் மேலாக ‘காங்கிரஸ் அழித்தொழிப்பு’என்றே சொல்ல வேண்டும்.
இது மோடி நிகழ்த்திய சூரசம்ஹாரமாக பா.ஜ.க-வினர் சொல்லக்கூடும். ஆனால், இதுவொரு சுய அழித்தொழிப்பு. இதற்கான ‘முழுப் பெருமை’யும் காங்கிரஸை, குறிப்பாக அதன் முதல் குடும்பத்தையே சாரும்.
ஆ. ராசா வெறும் கருவிதான்
மன்மோகன் சிங் எதிர்பார்ப்பதுபோல் வரலாறு நிச்சயமாக அவரைக் கனிவாக மதிப்பிடாது. ஆனால், சோனியா மற்றும் ராகுலை வரலாறு இன்னும் அதிகக் கடுமையுடன் மதிப்பிடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், உண்மையாக ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருந்தது காங்கிரஸ் கட்சியின் தலைவரும் துணைத் தலைவருமே.
தனது அமைச்சரவையில் நடந்த எல்லா ஊழல்களையும் பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததுடன் அவற்றை மூடிமறைக்கவும், அவற்றின் மீது நடவடிக்கைகள் வரமால் பார்த்துக்கொள்ளவும் முயன்றார் சிங். ஊழல்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை அவரது எதிரிகள் கூட சந்தேகிக்க மாட்டார்கள். ஆனால், சோனியா மற்றும் அவரது குடும்பத்தினரின் கதை அப்படிப்பட்டது அல்ல. பிரதமரின் வழிகாட்டுதலை மீறி ஆ. ராசா போன்ற ஒரு ஜூனியர் அமைச்சர் (காபினட் அமைச்சராக இருந்தாலும்) இவ்வளவு பெரிய முறைகேட்டில், ஊழலில் ஈடுபட முடியும் என்பது சாத்தியமற்றது.
ராசாவால் பிரதமரை மீற முடிந்தது என்றால் பிரதமரை விட சக்தி வாய்ந்த ஒருவரின் ஆதரவு அவருக்கு இருந்திருக்கிறது என்பதுதான் காரணம். ஐ.மு.கூ. ஆட்சியில் பிரதமரை விட சக்திவாய்ந்தவர் யாரென்பது சொல்லித்தெரிய வேண்டிய விஷயமல்ல. அவர் ராசாவுக்கு ஆதரவாக இருந்ததற்கான காரணமும் சொல்லித் தெரிய வேண்டியதல்ல.
காங்கிரஸுக்கு நன்றி சொல்லுங்கள் மோடி
மோடி ஒரு நல்ல மேடைப்பேச்சாளர், பல பெருநிறுவனங்களின் அமோக ஆதரவைப் பெற்றவர், விளம்பர உத்தியில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனாலும், அவரது வெற்றிக்கு காரணம் காங்கிரஸ்தான். இவ்வளவு ‘மகத்துவங்கள்’ பொருந்திய மோடி 2009-ல் பா.ஜ.க-வின் வேட்பாளராக இருந்திருந்தாலும் முடிவுகளில் வித்தியாசம் அதிகம் இருந்திருக்காது.
காங்கிரஸ் மீது மக்கள் பெரும் கோபம் கொள்வதற்கான காரணங்கள் இரண்டுதான்: 1. மலைக்க வைக்கும் ஊழல்கள். 2. கடுமையான பணவீக்கமும் விலைவாசி உயர்வும். பணவீக்கத்துக்கான காரணங்கள் பல. திறன் மிகுந்த அரசாங்கத்தால் கூட சில சமயம் அதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஊழல் விவகாரம் அத்தகையது அல்ல. இன்று எந்தவொரு வர்த்தகத்தையும் விட அதிக லாபம் தரும் வர்த்தகமாக அரசியல் பலராலும் பார்க்கப் படுகிறது என்றால் அந்நிலையை உருவாக்கி யதில் காங்கிஸிரசின் பங்கு தலையாயது.
குஜராத் படுகொலைகளை நினைவுபடுத்தியே சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்றவர்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற காங்கிரஸின் திட்டத்தில் மண் விழுந்திருக்கிறது. அத்வானி, மோடி, கிரிராஜ் சிங், தொகாடியா ஆகியோருக்கிடையே சித்தாந்த ரீதியாக எந்த வேறுபாடும் கிடையாது. மோடி மாறிவிட்டார் என்று கருதுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், ராமர் கோயிலைக் காட்டி ஆட்சிக்கு வருவது சாத்தியமல்ல என்பதை மோடி உணர்ந்திருந்ததன் விளைவாகவே உத்தரப் பிரதேசத்தில் சில இடங்களைத் தவிர்த்து வேறு எங்குமே மோடியும் அமித் ஷாவும் இந்துத்துவா துருப்புச்சீட்டைப் பயன்படுத்தவேயில்லை.
பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழலற்ற நல்லாட்சி என்ற கோஷங்களை மட்டுமே தான் செல்லுமிடங்களிலெல்லாம் மோடி வைத்தார். பொருளாதார மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கான மனிதராக அவர் தன்னைப் பற்றி வெற்றிகரமாகக் கட்டியமைத்த பிம்பம் அவருக்கு இப்போது பெரிதும் உதவியிருக்கிறது. சுவரின்றி சித்திரம் வரைய முடியாது. ஊழல் மிகுந்த, மேட்டிமைத்தனம் மிகுந்த காங்கிரஸ் ஆட்சிதான் அந்த சுவர். காங்கிரஸுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறார் மோடி.
க.திருநாவுக்கரசு, சமூக-இலக்கிய விமர்சகர், kthiru1968@gmail.com
தி இந்து
0 comments:
Post a Comment