நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் ‘அகநாழிகை’ இதழ், புதிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் எழுத்தாளர் பொன். வாசுதேவன். அகநாழிகையின் முதல் இரு இதழ்கள், இணையத்தில் காத்திரமாக எழுதத் தொடங்கிய படைப்பாளி களுக்கான களமாக இருந்தன. யாத்ரா, விநாயக முருகன்,
ச. முத்துவேல், காந்தி, நர்சிம், லாவண்யா சுந்தர்ராஜன், சுகிர்தா போன்ற இணைய எழுத்தாளர்கள் பலருக்கும் அகநாழிகை இதழ் அடுத்த பரிணாமத்திற்கான மேடையை அமைத்துத் தந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் பலரின் முதல் கவிதை, கதைத் தொகுப்புகளையும் அகநாழிகை வெளியிட்டது.
இந்த இதழில், கட்டுரை களுக்கான சிறப்பிதழைப் போல் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கவிஞர் ராஜசுந்தர்ராஜன், குட்டிரேவதி, இசை, தி. பரமேசுவரி, ஜீவ. கரிகாலன், எச். பீர் முகம்மது, சித்தார்த் வெங்கடேசன், ராஜ் சிவா ஆகிய எழுத்தாளர்கள் இந்த இதழுக்குப் பங்களித்துள்ளார்கள். இவை தவிர தி. பரமேசுவரி செய்துள்ள ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல் இதழுக்குக் கூடுதல் வலுச் சேர்க்கிறது.
பெருமாள் முருகனின் ‘வான்குருவியின் கூடு’ குறித்த இசையின் கட்டுரை வாசிப்புக்குச் சுவை சேர்க்கிறது. புவி வெப்பமயமாதல் குறித்த ராஜ் சிவாவின் கட்டுரை முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. இதழில் உள்ள கட்டுரைகளின் மொழி குறித்து ஆசிரியர் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். சில கட்டுரைகளின் மொழி வாசிப்புக்குச் சிக்கலாக இருக்கிறது. இலக்கியம், சமூகம், அரசியல் பல அம்சங்களுடன் வெளியாகி இருக்கும் அகநாழிகை, இந்த இதழ் மூலம் தன்னை நடுநிலை இதழாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.
தி இந்து
0 comments:
Post a Comment