சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு சேவை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் சனிக்கிழமை பொன்விழா கொண்டாடப்பட்டது.
இந்தியத் தூதரகத்தின் மூத்த அதிகாரி வினோத் கே.ஜேக்கப் இந்த விழாவில் கலந்து கொண்டு சீன வானொலியின் தமிழ் சேவையை பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சீனா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
சீன வானொலி 56 மொழிகளில் ஒலிபரப்பு சேவையை செய்து வருகிறது. இதில் தமிழ், ஹிந்தி, பெங்காலி மற்றும் உருது உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.
சீன வானொலியின் தமிழ் சேவை 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சேவை இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அன்றாடம் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
எழுத்து, ஒலி, படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தொடர்பு தளத்தில் இச்சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறுகிய அலைவரிசை, பண்பலை, இணையம் மற்றும் மாத இதழ் வெளியீடு உள்ளிட்ட சேவைகளை சீன வானொலியின் தமிழ் பிரிவு வழங்கி வருகிறது.
இச்சேவை தற்போது 8 மணி நேரம் (4 மணி நேரம் சிற்றலை, 4 மணி நேரம் பண்பலை) ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. சீன மாணவர்களின் உதவியுடன் இந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பீகிங் பல்கலைக்கழகம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அயல்நாட்டு மொழிகளை சீன மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது.
செல்போன் வழியாக சீனாவைப் பற்றி தமிழில் அறிவதற்கான மென்பொருளை உருவாக்க திட்டமிட்டு வருவதாக சீன வானொலி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :- தினமணி, 04-08-2013
0 comments:
Post a Comment