Home » » தமிழிசைக் கருவிகளின் தோற்றம் - தமிழண்ணல்

தமிழிசைக் கருவிகளின் தோற்றம் - தமிழண்ணல்




வேட்டுவன் கையில் எப்போதும் வில்லம்பு இருக்கும். அவன் வேட்டையாட, வெகு தூரத்துக்குப் பாயும் அம்பும், அதனைச் செலுத்தும் வில்லிலுள்ள நரம்பும் பக்குவப் படுத்தப்பட்டிருக்கும்.

எந்த நேரமும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதே தொழிலாதலின், நரம்பில் அம்பை வைத்து, எட்டுத் திக்கும் எய்வது மிகப் பழக்கப்பட்டதென்றாகி விட்டது. சற்றே ஓய்வாக இருக்கும்போதும், அவன் கை சும்மா இராது. வில்லிலுள்ள அம்பைத் தெறித்தபடி இருக்கும்.




அப்போது, அதிலிருந்து ஓர் இனிய இசை ஒலிப்பதைக் கேட்டான். அது பிறகு வில்யாழாகத் தோன்றி சீறியாழ், பேரிழாய், செங்கோட்டியாழ், மகரயாழ் எனப் பல்வேறு வகைகளாக வளர்ந்தது. இவ்வாறு உய்த்து உணரச் சங்க இலக்கியம் இடம் தருகிறது. நரம்புக் கருவியின் வளர்ச்சி இது.




ஒüவையார், அதியமானைப் பாடிய பாடலொன்றில் அவனது வீரச் சிறப்பைப் புனைகின்றார். யானை, புலி, மானை எல்லாம் வேட்டையாடி, அவற்றின் தசையைத் தின்ற பிறகு, தோலை மரக்கிளைகளில் தொங்கவிட்டிருப்பர். அவை காய்ந்த பிறகு பக்கத்தே உள்ள கிளைகள் அசைந்து அவற்றில் மோத மோத ஓர் ஓசை கேட்டபடி இருந்தது.

அந்த ஓசை, போருக்கு அழைக்கும் முரசொலிபோல இருந்ததால், "போர் வந்துவிட்டது' என அதியன் துள்ளி எழுவானாம். தோற்கருவிகளைப் படைக்க இது தூண்டுகோல் ஆனது. முப்பதுக்கு மேற்பட்ட தோற்கருவிகளின் தோற்றமும் வளர்ச்சியும் இது.

கபிலர், அகநானூற்றுப் பாடலில் ""ஆடு அமைக் குயின்ற அவிர்துளை மருங்கின், கோடை அவ்வளி குழலிசை யாக'' எனக் குறிக்கின்றார். மலை மீதுள்ள மூங்கிலை வண்டுகள் துளையிட்டுப் போக, மலை முகடாதலின் மேல் காற்று கடிதே வீச, ஓர் இனிய இசை கேட்டது. இதை மனிதன் பார்த்தான். "நாமும் மூங்கிலில் துளையிட்டு வாயால் ஊதினால், அந்த இனிய இசை பிறக்கும்தானே' என்று எண்ணினான். புல்லாங்குழல் பிறந்தது. இவ்வாறு துளைக்கருவி தோன்றி வளர்ந்தது.

தமிழ் ஓர் இயற்கை வழிப்பட்ட மொழி. தமிழன் கண்ட இசைக் கருவிகளும் இங்ஙனம் இயற்கைவழித் தோன்றி வளர்ந்தன என்பது ஒரு தனிச்சிறப்பாகும்

நன்றி :- தமிழ்மணி, தினமணி- 18 -08-2013.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger